அவள் அவளாக இப்போது இல்லை
அவளை அறியாமலேயே
அவள் அவளாக இப்போது இல்லை,
இனி
எப்போதுமே இல்லை.
செக்கன்கள் நிமிடங்களாகி,
நிமிடங்கள்
மணிகளாகி,
வருடங்களாக தொடரும் சதி
இனி அவளின் விதியாக
வீர நடை போடுகிறது.
ஜன்னல் ஓர மழையை ரசித்தவள்,
பூனை குட்டிக்கு புதுமெத்தை தந்தவள்,
நினைத்த போதெல்லாம் மருதாணி அரைத்தவள்,
இனி வருவதாய் இல்லை.
நீண்ட ஓடையில் குதூகலமாய் குளித்தவள்,
பச்சை வயலெங்கும் பட்டம் இழுத்தவள்,
பேத்தை குட்டியை தொட்டியில் வளர்த்தவள்,
மறுபடி எட்டிப்பார்ப்பதாய் இல்லை.
அன்னை மடியில் அமைதியாய் படுத்தவள்,
தந்தை செல்லத்தில் திமிராய் நடந்தவள்,
பஞ்சு மிட்டாய்க்காய்
பல தவம் இருந்தவள்,
இனி வருவதாய் இல்லை.
அண்ணன் பயிற்சியில் சைக்கிள் மிதித்தவள்,
அக்கா பிடியினில் பாடம் படித்தவள்,
காரணம் இல்லாமல் கலகலப்பாய் சிரித்தவள்,
இனி மலர்வதாய் இல்லை.
ஏனென்றால் இப்போது அவள்
அழுக்குத் துணிகளை அழகாய் துவைக்கிறாள்,
கறைபாத்திரத்தை கண்ணியமாய் கழுவுகிறாள்,
மூவேளை சமையல்
சமத்தாய் முடிக்கிறாள்,
துணைவனின் கடமையெல்லாம் துணிவாய் முடிக்கிறாள்,
மழலையின் பசி தீர்க்க உதிரத்தை கொடுக்கிறாள்,
வீட்டு வேளைகளை வித்தையாய் தொடர்கிறாள்,
பொன்னான நேரமதை தானமாய் தருகிறாள்,
அவள் அவளாக இப்போது இல்லை
அவளை அறியாமலேயே
அவள் அவளாக இப்போது இல்லை,
இனி
எப்போதுமே இல்லை.
BY
FAHEEMA MOUZOON
Thiththawelgala.


No comments:
Post a Comment